கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
என்னை சாட்சியாக நிறுத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். நான் கோயம்புத்தூர் பட்டணத்தில் ஒரு சிறிய கடை வைத்து அதில் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளேன். கடந்த 22.3.2021 அன்று இரவு நான் மிகவும் சோர்வுக்குள் உள்ளானேன். கடையில் வியாபாரம் இல்லை,கடன் பிரச்சனை,வாடகை கொடுக்க முடியவில்லை, குடும்பத்தில் நல்ல விஷேசம் சுபகாரியம் தடை இவைகள் அனைத்தும் என் உள்ளத்தை மிகவும் அழுத்தியதால் அவிசுவாசமான வார்த்தைகள் என் உள்ளத்தில் வர நான் இடம் கொடுத்து விட்டேன். நான் என் அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தேன். இனி கடை வியாபாரம் நடக்காது, கடன் பிரச்சினை மாறப்போவது கிடையாது, நம் வீட்டில் நல்ல காரியம் நடக்காது என்று சொல்லியபடி மிகவும் சோர்வோடு,கர்த்தாவே போதும் என்னை எடுத்து விடும் என்றேன். அப்படியே சோபாவில் தலையைத் தூக்கியபடி அமர்ந்து இருந்தேன் .அப்பொழுது ஆவியானவர் என்னோடு பேசினார் .உன் அருகில் இருக்கின்ற உனது போனை எடு என்று .நான் போனை எடுக்க முயற்சித்தபோது என்னால் அருகில் இருந்த போன் கூட எடுக்க முடியாதபடி மிகவும் ஆவியில் சோர்வானது. மறுபடியும் போனை எடு என்று ஆவியானவர் பேசினார் .கைகளை மெதுவாக அசைத்து அந்த போனை எடுத்த போது JasJemi அவர்களது ஊழியமாகிய இயேசு முன் செல்கிறார் ஊழியத்தின் மூலமாக போடப்பட்ட Community க்குள் போகும்படி ஆவியானவரால் ஏவப்பட்டேன்.அப்பொழுது தேவனுடைய கிரியை  உன் சத்துருக்களின் வாழ்வில் வெளிப்பட போகிறது என்ற தலைப்பில் எழுதப்பட்ட வார்த்தையை பார்த்து அதை வாசிக்கத் தொடங்கியபோது என் மீது ஒருவர் ஆறுதலாக தோளின் மீது கைகளை வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி நான் உணர்ந்தேன். அதை வாசிக்க வாசிக்க என்னை கட்டி வைத்த கரங்கள், கால்கள்,நாவு அனைத்திலும் ஒரு விடுதலையை நான் உணர்ந்தேன்.தேவபெலன் எனக்கு உண்டானது, தேவபிரசன்னம் என்னை நிறைத்தது. உடனே எழுந்துபோய் ஜெப அறைக்குப் போய் ஒரு 30 நிமிடம் ஜெபித்தேன். வெளியே வந்து பாஸ்டர் சுந்தர்சிங் அய்யா அவர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு என்னுடைய பிரச்சினையை வாய்ஸ் மூலமாக தெரியப்படுத்தினேன்.அவர் உடனே பதில் அனுப்பினார்.நான் ஜெபித்துக் கொள்கிறேன், கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு இதை குறித்து நான் உங்களுடன் போனில் பேசுகிறேன் என்றார்.அடுத்த நாள் என்னை போனில் அழைத்து சோர்ந்து போகாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அதை குறித்து அதிக நேரம் பேசினார். மிகவும் ஆறுதலாக இருந்தது.சமாதானம் என்னை நிறைத்தது. அன்று இரவு நன்றாக ஜெபிக்க முடிந்தது.அதற்குப் பின்பு இதுவரைக்கும் அந்த சோர்வும் பெலகீனமும், மரித்துவிட்டால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. எனக்காக நேரம் எடுத்து ஜெபித்து, ஆலோசனை கொடுத்த பாஸ்டர் சுந்தர் சிங் அய்யா அவர்களுக்கும் பாஸ்டர் ஜான் டைட்டஸ் அவர்களுக்கும் அவர்கள் ஊழிய குடும்பம் அனைவருக்கும் நன்றி. இவர்களை பயன்படுத்தி என்னை முற்றிலும் விடுதலை ஆக்கிய கர்த்தாதி கர்த்தருக்கு துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக.ஆமென் அல்லேலூயா.

                                                                             
ரவிச்சந்திரன் (கோயம்புத்தூர்).

கர்த்தரின் மேலான நாமத்திற்கு ஸ்தோத்திரம். எனது பெயர் சோனியா.எனது ஊர் நெய்வேலி. எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. கர்த்தருடைய கிருபையால் இரண்டு மகன்கள் உள்ளனர். நான் கிறிஸ்தவள். ஆனால், ஆவிக்குரிய சபை சார்ந்தவள் அல்ல. 9 வருடங்களுக்கு முன்பு எனது கல்லூரி பருவத்தில் ஆண்டவர் ஒரு ஜெப கூட்டத்தில் கர்த்தர் என்னை ஆசீர்வதித்து அபிஷேகம் பண்ணி அந்நியபாஷை வரம் தந்தார். ஆனால், எனக்கு அதின் முக்கியத்துவம் மகிமை எதுவும் தெரியாது. அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டேன். ஏனென்றால், என்னை மற்றவர்கள் நான் உளருகிறேன் என்று சொல்லி பரிகாசம் பண்ணுவார்கள் என்று நினைத்தேன். எனது கல்லூரி படிப்பை முடித்தவுடனே எனக்கு திருமணம் முடிந்தது. நான் திருமணம் செய்து கொண்ட குடும்பம் மிகுந்த விக்கிரக ஆராதனை நிறைந்ததாய் இருந்தது. அதில் நான் பின் மாற்றமடைந்து போனேன். ஆண்டவர் எனக்கு கொடுத்த வரத்தை மறந்து போனேன். எனது மாமனார் குறி சொல்பவர். அதனால் கடவுளிடம் நேரடியாக செல்ல தேவையில்லை, இவர் வழியாக கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி மதியீனத்தால் தவறு செய்தேன். எனக்கு திருமணமாகி ஒரு மாதத்தில் எனது மாமனார் இறந்து போனார். அது எனக்கு பேரதிர்ச்சி. இப்படியே எட்டு வருடம் ஆகிவிட்டது. நானும் எனது கணவரும் அவரை தெய்வம் போல் பாவித்து விட்டோம் .கடந்த வருடம் 2020 மே மாதம் ஊரடங்கு தொடங்கிய புதிதில் எனது கல்லூரி தோழி ஒருத்தி என்னிடம் நான் ஆவிக்குரிய சபைக்கு மாறிவிட்டேன், வேதாகமம் வாசி, இயேசப்பா உன்னுடன் பேசுவார் என்று மட்டும் கூறினாள். அவளுக்கு ஆவிக்குரிய சபை கண்டாலே பிடிக்காது. நான் மிகுந்த ஆச்சரியமுற்று வேதாகமத்தை தூசிதட்டி படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க என்னுடைய பாவங்கள் அனைத்தையும் என் கண்முன் ஆண்டவர் கொண்டு வந்தார். பாரம் தாங்காமல் நான் அழ ஆரம்பித்தேன். அப்பொழுது எனக்கு வேதாகமத்தில் ஆண்டவர் எப்படி பேசுவார்? ஆண்டவர் உண்மையில் யார்? என்று பல கேள்விகள் எழுந்தன. எனக்கு ஜெபம் சொல்ல தெரியாது. எனது நண்பரிடம் பேசுவது போல ஆண்டவரிடம் கேள்விகளை வைப்பேன். ஒருநாள் YouTubeல் JasJemi சேனலை பார்க்க நேர்ந்தது. நான் முதலில் இந்த சின்ன பிள்ளைங்கட்ட நமக்கு தேவையான பதில் எப்படி கிடைக்கும் என்று எண்ணினேன். ஆனால்,அற்பமான ஆரம்பத்தை யார் அசட்டை பண்ணலாம்? என்ற வேத வாக்கியத்தின்படி என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் ஆண்டவர் அவர்கள் மூலமே பதிலளித்தார். அப்பொழுதுதான் எனது அபிஷேகத்தை குறித்தும் அந்நியபாஷை குறித்தும் நினைவுக்கு வந்தது .நான் பேச முயற்சித்தேன் .ஆனால் என்னால் முடியவில்லை. அப்பொழுதுதான் நான் அந்த வரத்தை இழந்தது எனக்கு தெரியவந்தது. நான் தினமும் முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. அப்பொழுதுதான் JasJemi சேனலில் அவர்களது தொடர்பு எண் கொடுக்கப்பட்டது. அந்நியபாஷை குறித்து பாஸ்டர் அப்பாவிடம் (பாஸ்டர்.சுந்தர்சிங்) 17. 7. 2020 அன்று ஆலோசனை பெற்றேன். அப்பொழுது அவர் நீங்கள் தனி ஜெபத்தில் கேளுங்கள் ஆண்டவர் நிச்சயம் தருவார் என்று கூறினார். நானும் அழுது கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. (18. 7 .2020) அன்று காலை என் சொப்பனத்தில் பலத்த குரல் ஒன்று என் பெயரை அழைத்து," எழுந்து அந்நிய பாஷை பேசத் துவங்கு" என்று சத்தமாக சொல்ல ஆரம்பித்தது. நிறைய சந்தேகம் கேட்டாயே எழுந்து பேசு என்றது. ஆனால், ஏதோ ஒரு பாரம், என்னால் எழ முடியவில்லை. இறுதியாக நான் முயன்று பேச ஆரம்பித்தேன் . நான் இழந்த வரத்தை சொப்பனத்தில் பெற்றேன். திடுக்கிட்டு எழுந்து எனது அறையில் சென்று சொல்ல முயற்சித்தேன் வரவில்லை. ( 20.1. 2020) அன்று JasJemi சேனலில் "அபிஷேகமும் அந்நியபாஷையும்" என்ற தலைப்பில் பேசினார்கள். அந்த வீடியோவில் ஆண்டவர் என்னுடன் இடைப்பட்டார். அன்று மதிய வேளை என்னுடைய கணவர், குழந்தைகள் எல்லோரும் இருந்த சமயம் என்னால் என் கண்ணீரை அடக்க முடியாமல், ஜெபிக்க தனி இடமும் கிடைக்காமல், நான் சமையலறையில் பாத்திரம் கழுவிக் கொண்டு, இயேசப்பா என் உள்ளம் தெரிந்தவர். நீர் என் பாவத்தை மன்னித்து எனக்கு வரத்தை மீண்டும் தாரும் என்று சொல்லி, ஸ்தோத்திரம் சொல்ல ஆரம்பித்தேன். ஆண்டவர் அந்தக்கணமே என் மன்றாட்டைக் ஏற்றுக்கொண்டு என்னை அபிஷேகித்தத்தோடு அந்நியபாஷை வரத்தையும் மீண்டும் கொடுத்தார். கர்த்தரின் நாமத்துக்கு ஸ்தோத்திரம். JasJemi மற்றும் அவர்கள் ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக .ஆமென்.
    
                                                                              
 சோனியா (நெய்வேலி).

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம், ஆண்டவர் எங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய அற்புதத்தை செய்ததும் அன்றி எங்கள் குடும்பங்களை ஜெபிக்கும் பலிபீடங்களாக மாற்றியமைத்துள்ளார், அதற்காக தேவனுக்கு நன்றி. கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்று, எனது சித்தப்பா, சித்தி, மற்றும் அவர்களின் மகன் எல்லோருக்குமாக கொரோனா பாசிட்டிவ் வந்தது. எனது சித்தப்பா எலக்சன் டியூட்டி போய் இருந்திருக்கிறார் ஆதலால் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் கூட தொற்று ஏற்பட்டுள்ளது. பயமும் ,பதற்றமும், கொண்டவர்களாக மருத்துவமனையில்அவரை சேர்த்தோம். சித்தப்பா குடும்பம் ஒரு பெயரளவு கிறிஸ்தவர்களாகவே இருந்தனர். நான் உடனே பாஸ்டர் சுந்தர்சிங் அவர்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு ஜெப உதவியை நாடினேன்., அவர்களும் எல்லோருக்காகவும் ஜெபிக்கிறோம் தைரியமாக இருங்கள் என்று கூறினார். நாங்களும் எங்களது குடும்பங்களிலும் தொடர்ந்து ஜெபித்து கொண்டு வந்தோம். மறுதினத்தில் எனது சிறிய தகப்பனார் சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவர்கள் நரம்பியல் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதி கோரினார்கள். நாங்களும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவரை டாக்டர்ஸ் சோதித்து பார்த்து இவர் சுய நினைவு திரும்பவே 6 மாதங்கள் ஆகி விடும்., கொரோனா வேறு உள்ளது என சொல்ல கேட்டு மிகவும் கலக்கம் அடைந்தோம்., முதலாவது சித்தப்பாவின் குடும்பத்தின் நிலைமையும் அதற்கான 6 மாதங்கள் செலவுகளை நினைக்கும்போது மனசோர்வும் அடைந்தோம். ஆனாலும் ஜெபிப்பதை நிறுத்தவில்லை, ஒரு சில தினங்களில் தம்பியும், சித்தியும், நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டனர். அதன் பிறகு 4-5 நாட்களில் எனது சிறிய தகப்பனார் கண்களைத் திறந்தார், எனினும் அவரால் நாம் யார், என்ன உறவு என்பதே புரியாத நிலையில் இருந்தார். 6 வாரங்களில் பூரண குணம் பெற்றார் எனது சித்தப்பா இப்பொழுது நலமாக உள்ளார். 6 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்ற இடத்தில் 6 வாரங்களில் சுகம் கொடுத்த தேவனுக்கும் இயேசு முன்செல்கிறார் ஊழியர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். அதன்பிறகு எனது மாமா குடும்பத்தினர் கொரோனா பாசிட்டிவ் வந்தபோது தொடர்புகொண்டு ஜெபிக்க சொன்னேன்., பாஸ்டர் தவறாது ஜெபித்து ஆறுதல் கூறினார். நான் மன உளைச்சலில் இருந்த பல சந்தர்ப்பங்களில் ஆவிகுரிய வழிநடத்துதலை பாஸ்டர் கொடுப்பார். தேவன் இந்த ஊழியத்தை இன்னும் பயன்படுத்துவர் என்று விசுவாசித்து அவரை ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்..ஆமென்..

                                          Anne Roshini - (Germany) Relative name: Antony,Clara,Livin.என்னுடைய பெயர் சியாமளா. நான் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன். நான் என்னுடைய சாட்சியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்காக அர்ப்பணிக்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நான் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் எனது நண்பர் மூலமாக அறிந்து கொண்டேன். நான் இயேசுவை பற்றி கற்றுக்கொள்ளவோ எந்த பாதை சரியான பாதை என்று எனக்கு சொல்லி தர யாருமில்லை. அதனால் நான் யூடியூப் இல் கிறிஸ்தவ சேனல்களை பின்பற்றி ஆண்டவரிடம் எப்படி நெருங்குவது, வேதத்தை எப்படி வாசிப்பது, என்பதை கற்றுக் கொண்டேன். யூடியூப் இல் உள்ள வசனங்கள் மற்றும் ஜெபங்கள் கேட்டு என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தேன். ஒரு முறை இந்தியாவில் என்னுடைய தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது ஒரு மனிதரையும் அவர் குடும்பத்தையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அவர்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்தார்கள். அவர்கள் எங்களுக்காக ஜெபம் பண்ணினார்கள். அவர் எனக்காக தலைமேல் கைவைத்து ஜெபிக்க ஆரம்பித்த போது அவருடைய மனைவி ஒருபுறம் அவர் சொல்லுவதை எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஜெபித்து கர்த்தர் என்னை நேசிப்பதாகவும், என்னுடைய கண்ணீரெல்லாம் ஒரு துருத்தியில் வைத்திருப்பதாகவும் சொன்னார். இன்னும் நிறைய விஷயங்களை சொன்னார். என்னுடைய குடும்பத்தை பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார். அதன் பின்பு எனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கும் என்றும் நாங்கள் ஆஸ்திரேலியாவில் ஒரு வீடு கட்டுவோம் என்றும் சொன்னார். அதன் பின்பு நான் என்னுடைய தினசரி வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் ஒரு சில நாட்களுக்குப் பின்பு எப்படி என்று தெரியவில்லை திடீரென்று காலையில் எனக்கு அந்த மனிதருடைய ஞாபகமும், அவருடைய குடும்பமும் அவர் சொன்ன எல்லா வார்த்தைகளும் ஞாபகத்தில் வந்தது. அவர் சொன்ன படியே எனக்கும் நடந்தது., ஏனென்றால் அவர் சொன்னபடியே என் வாழ்க்கை எல்லாம் நடந்து இருந்தது. எனக்கு அதே போல் ஒரு பையன் பிறந்தான்., அவர் சொன்னபடியே நாங்கள் அந்த தேசத்திற்கு போய் இருந்தோம். அதனால் நான் மறுபடியும் அவர்களை தொடர்பு கொண்டு பேச நினைத்தேன். அவர்கள் ஆந்திரப்பிரதேசம் கம்மம் பகுதியில் இருக்கிறார்கள். அவருடைய தொலைபேசி நம்பரை பெற்று கொண்டு அவருக்கு நன்றி செலுத்தினேன். அதன் பின்பு மறுபடியும் அவர்கள் எனக்காக குடும்பத்தோடு ஜெபித்தார்கள். என்னால் நம்ப முடியாத நிறைய விஷயங்களை மறுபடியும் என்னிடம் சொன்னார்கள். ஆனாலும் அவர் தேவ மனுஷன் என்பதால் நான் அவர் சொன்ன எல்லாமே உண்மை என்று நம்பினேன். அதிலிருந்து தேவனுடன் உண்டான சமாதானத்தை நான் இழந்தது போன்று உணர்ந்தேன். என்னுடைய மனதில் அமைதி இல்லாதது போலிருந்தது. அவர்கள் அவர்களுடைய ஊழியத்திற்காக என்னிடம் பணம் கேட்க ஆரம்பித்த போது ஏதோ சரியாக இல்லாதது போல் என்னுடைய உள்ளத்தில் உணர்ந்தேன். ஆனாலும் கர்த்தர் வேதத்தில் நம்முடைய சம்பளத்தில் 10% கடவுளுக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்ததால் நான் கொடுக்க ஆரம்பித்தேன்., ஆனாலும் அவர்கள் மறுபடியும் மறுபடியும் இன்னும் நிறைய ஆண்டவருக்கு கொடுத்தால்தான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களிடமிருந்து என்னால் எந்த ஒரு ஆவிக்குரிய அறிவையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எப்போதுமே பணம், ஐஸ்வரியம், இதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருந்தார்கள். அது எனக்கு வேதத்துக்கு முரண்பாடாக தெரிந்தது. உதாரணத்துக்கு நான் கிறிஸ்துவை பின்பற்றினால் எனக்கு ஒரு நாளும் கவலையோ, கண்ணீரோ, கஷ்டங்களை, எதுவுமே வராது. நான் வந்து எப்போதுமே சந்தோஷமாக நல்லா திருப்தியாக சாப்பிட்டு நம்முடைய வாழ்க்கையை அனுபவிக்கலாம்., என்பது போன்று சொல்வார்கள். ஆனால் எனக்குள் ஏதோ ஒன்று இது சரியாக தென்படவில்லை. நாம் தவறான நபர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. அதனால் நான் கர்த்தரிடம் ஜெபிக்க ஆரம்பித்தேன். என்னை சரியான வழியில் நடத்துமாறு ஜெபிக்க ஆரம்பித்தேன். அதன்பின்பு நான் ஜெபம்பண்ணி முடித்தவுடன் JASJEMI யூடியூப் சேனலை நான் பார்த்தபோது "இரட்சிக்கப்பட்ட பின்பு நாம் என்ன செய்ய வேண்டும்". என்று ஒரு தேவ செய்தி பிப்ரவரி 17, 2021 அன்று வெளியானது, அதில் சகோதரர் அவர்கள் நமக்கும் கடவுளுக்கும் எப்படி உறவு வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆண்டவர் நம்மை எப்படி அவர் பாதையில் நடத்துவார் என்று பேசினார். எரேமியா 3:15 வசனத்தையும் காண்பித்து, "உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும், புத்தியோடும் மேய்ப்பார்கள்." என்ற வசனத்தை சொல்லி பேசினார். உடனே நான் பாஸ்டர் சுந்தர்சிங், அவர்களை தொடர்புகொண்டு என்னுடைய இந்தப் பிரச்சினை எல்லாவற்றையும் நான் சொன்னேன். அப்போது அவர் அந்த மனிதனோடு உண்டான எல்லா தொடர்புகளையும் துண்டிக்கும் மாறும் அவருடைய தவறான உபதேசங்கள், மற்றும் பணம் கொடுப்பது , போன்ற காரியங்களை நிறுத்துமாறு எனக்கு வழிகாட்டினார். இந்த ஊழியத்தின் மூலம் கர்த்தர் எனக்கு சரியான நேரத்தில் வழி நடத்தியதற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்., தேவனுடைய நாமம் மட்டுமே மகிமை படுவதாக. ஆமென்.​

                                                                   சியாமளா (ஆஸ்திரேலியா).


எங்களை சாட்சியாக எழுப்பிய தேவாதி தேவனுக்கு நன்றி ! கர்த்தர் எங்கள் வாழ்வில் பெரிய அதிசயமான காரியங்களை செய்துள்ளார். என் பெயர் Jerwin Roy என் மனைவி பெயர் Sherlin Malar.கர்த்தரின் பெரிதான கிருபையால் என் மனைவி கர்ப்பம் தரித்து இருந்தார்கள். Dec 10,2020 அப்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்கள்.நாங்கள் ரெகுலராக ஸ்கேன் எடுக்க சென்றோம். அப்போது டாக்டர் சொன்னாங்க குழந்தைக்கு ஒரு வைரஸ் பாதித்து உள்ளது.,அதன் காரணமாக குழந்தையை சுற்றி ஒரு திரவம் போல ஒரு லேயர் இருக்கின்றது.இதை இப்படியே விட்டால் 4,5 மாதங்கள் கழித்து அந்த குழந்தை தானாகவே கரு கலைத்துவிடும் என்றார்கள்.நங்கள் மிகவும் கவலையுற்று எங்களுக்கு தெரிந்த எல்லா ஊழியர்களிடம் சொல்லி ஜெபிக்க சொன்னோம்.நாங்களும் தொடர்ந்து ஜெபித்து வந்தோம்.அதற்கு ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் யூடூப்பில் Jasjemi சேனல் பார்த்து வந்தோம். எங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பல சந்தேகங்கள் மற்றும் நிறைய கேள்விகளுக்கு Practical பதில்கள் கிடைத்தது. ஆகவே Dec 12 நாம் அவர்களுக்கு ஒரு ஜெப குறிப்பு அனுப்பலாம் என்று எண்ணி அனுப்பினோம்.அதற்கு பாஸ்டர் சுந்தர் சிங் கர்த்தர் வாலாக்காமல் தலை ஆக்குவார் என்று சொல்லி ஜெபித்தார்கள். நாங்களும் ரெகுலர் ஸ்கேன் செக்கப் போவோம்.அப்போவே நாங்க ஒரு பொருத்தனை பண்ணினோம். Jan 1, 2021 எங்களுக்கு வாக்குத்தத்தம் எசேக்கியேல் 36:11 தந்து இது பெருக்கத்தின் ஆண்டு என்று சொல்லி வாக்குத்தத்தம் தந்தாங்க நாங்களும் தினமும் எங்கள் ஜெபத்தில் இந்த வாக்கு தத்தம் சொல்லி ஜெபம் செய்து வந்தோம்.தினமும் எங்களுக்கு வாக்குத்தத்தம் அனுப்புவாங்க, அது எங்களை விசுவாசத்தில் பெலப்பட செய்தது .Jan 23 ,2021 நாங்கள் ரெகுலராக ஸ்கேன் எடுக்க சென்றோம் Amniocentesis என்ற டெஸ்ட் எடுத்தாங்க, அதற்கு ரிசல்ட் Normal என்று சொன்னார்கள்.ஆனாலும் குழந்தை சுற்றி ஒரு திரவம் போல ஒரு லேயர் இன்னும் இருக்கின்றது என்று சொன்னார்கள். May 31 பாஸ்டர் Titus அவர்கள் எங்களிடம் என் மனைவி மற்றும் குழந்தையை குறித்து விசாரித்தார்கள். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் June 3ம் -தேதி எங்களுக்கு Due date தந்தார்கள் என்று சொன்னோம்.ஆனால் June 1ம் -தேதி என் மனைவிக்கு பனி குடம் உடைந்தது, நங்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். டாக்டர் பார்த்துவிட்டு அதிகாலை 2.30 மணிக்கு Labor ward யில் அனுமதித்தனர்.நான் உடனே Titus பாஸ்டர் இடம் message அனுப்பினேன். அன்று June புது மாதம் வாக்குத்தத்தம் உபாகமம் 5:10 "என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்" . இந்த வசனத்தை வைத்து நான் ஜெபித்தேன். 12+ மணி நேரம் பிறகு மாலை 3.47 மணிக்கு கர்த்தர் ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையை தந்தார். அனைத்து டாக்டர்களும் பார்த்து வியந்தனர், சந்தோஷம் அடைத்தனர்.நாங்கள் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறோம்.அற்புதம் செய்த தேவாதி தேவனுக்கு நன்றி. ஜெபித்த பாஸ்டர் சுந்தர் சிங், பாஸ்டர் டைட்டஸ், மற்றும் இயேசு முன் செல்கிறார் ஊழியங்கள் அனைவருக்கும் நன்றி கூறி எங்கள் சாட்சியை முடிக்கிறேன்.,ஆமென்.


                                                                              Jerwin Roy (Nagercoil).


 

20201021_134800.jpg

ரவிச்சந்திரன் (கோயம்புத்தூர்), 01.sep.2021

IMG-20210822-WA0007.jpg

 சோனியா (நெய்வேலி), 21.Aug.2021  

IMG-20210613-WA0022 (1).jpg

Anne Roshini - (Germany) Relative name: Antony,Clara,Livin
11.Jun.2021

IMG-20210613-WA0002 (1).jpg

சியாமளா (ஆஸ்திரேலியா) 10.jun.2021

Jerwin Roy (Nagercoil) 05.JUN.2021